யெகோவா தம் மக்கள் தம்மை மட்டுமே வழிபடவேண்டும் என்ற வைராக்கியமுள்ள இறைவன்; யெகோவா தம்மை எதிர்க்கிறவர்களை எதிர்க்கிறவரும், கடுங்கோபத்தில் பதில் செய்கிறவருமாய் இருக்கிறார். யெகோவா தம் எதிரிகளைத் தண்டித்து, தம் பகைவர்களுக்கு தமது கோபத்தை வெளிப்படுத்துகிறார்.
யெகோவா கோபங்கொள்வதில் தாமதிக்கிறவர், அவர் மிகுந்த வல்லமையுமுள்ளவர்; யெகோவா குற்றவாளிகளை தண்டியாமல் விடமாட்டார்; அவருடைய வழி சுழல்காற்றிலும், புயல்காற்றிலும் உள்ளது. மேகங்கள் அவருடைய பாதங்களின் கீழிருக்கும் தூசியாயிருக்கின்றன.
அவருடைய கோபத்தைத் தாங்கி நிற்கக் கூடியவன் யார்? அவருடைய கடுங்கோபத்தைச் சகிக்கக் கூடியவன் யார்? அவருடைய கோபம் நெருப்பைப்போல் கொட்டப்படுகிறது; அவருக்கு முன்பாக கற்பாறைகள் நொறுக்கப்படுகின்றன.
அவர்கள் முட்களின் நடுவில் சிக்குண்டு, தங்கள் திராட்சை இரசத்தினால் வெறிகொண்டிருப்பார்கள். அவர்கள் உலர்ந்துபோன பயிரின் அடித்தாள்கள் போல் சுட்டெரிக்கப்படுவார்கள்.
யெகோவா சொல்வது இதுவே: அசீரியருக்கு அநேக நட்புறவுள்ள நாடுகள் இருந்தன. “அவர்கள் எண்ணற்றவர்களாக இருந்தாலும் வெட்டப்பட்டு அழிந்துபோவார்கள். யூதாவே! நான் உன்னைத் துன்பத்தில் ஒடுக்கியிருந்தாலும், இனிமேலும் உன்னை நான் துன்புறுத்ததாதிருப்பேன்.
யூதாவே, இதோ சமாதானத்தை அறிவித்து, நற்செய்தி கொண்டு வருகிறவனுடைய கால்கள், உன் மலைகள்மேல் வருகின்றன. உன் பண்டிகைகளைக் கொண்டாடு. உன் நேர்த்திக் கடன்களை நிறைவேற்று. கொடுமையானவர்கள் இனி உன்மேல் படையெடுத்து வருவதில்லை; அவர்கள் முழுவதும் அழிக்கப்படுவார்கள்.